பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : ஜன 04, 2024 03:08 PM

மதுரை: கொடைக்கானலில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்ட விவகாரத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
கொடைக்கானல் அருகில் உள்ள வில்பட்டி பஞ்சாயத்து பகுதியில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பங்களா கட்டினர். அதற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என சர்ச்சை கிளம்பிய நிலையில், அதிகாரிகள் கட்டுமான பணியை நிறுத்தினர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த முகம்மது ஜூனைத் என்பவர் ‛ அனுமதியின்றி விதிகளை மீறி கட்டுமானங்கள் குறித்து முறையாக விசாரித்து, நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், ‛ பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா, திண்டுக்கல் கலெக்டர், கொடைக்கானல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு' விசாரணையை ஒத்தி வைத்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இருவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை துவக்கப்பட்டு உள்ளது' என விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், நடிகர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 9 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.