பொன்முடிக்கு நல்ல புத்தி வர ஹிந்து முன்னணி கோவிலில் பிரார்த்தனை
பொன்முடிக்கு நல்ல புத்தி வர ஹிந்து முன்னணி கோவிலில் பிரார்த்தனை
ADDED : ஏப் 13, 2025 02:59 AM

துாத்துக்குடி: அமைச்சர் பொன்முடிக்கு நல்ல புத்தி வர வேண்டும் என ஹிந்து முன்னணி அமைப்பினர் கோவிலில் பிராத்தனை செய்தனர்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பல்வேறு தரப்பினர் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தி.மு.க.,வில் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, திருச்சி சிவா, அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
இதற்கிடையில், ஹிந்து முன்னணி அமைப்பினர், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னிதியில் கோரிக்கை மனு வைத்து நேற்று பிரார்த்தனை செய்தனர்.
பெண்கள் குறித்து இழிவாக, தொடர்ச்சியாக பேசி வரும் அமைச்சர் பொன்முடிக்கு நல்ல புத்தி வேண்டும், அவரை அமைச்சரையில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
'பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது' என ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார் தெரிவித்தார்.