புதுச்சேரியில் 9ம் தேதி விஜய் பொதுக்கூட்டம் முழுவீச்சில் முன்னேற்பாடுகள் தீவிரம்
புதுச்சேரியில் 9ம் தேதி விஜய் பொதுக்கூட்டம் முழுவீச்சில் முன்னேற்பாடுகள் தீவிரம்
ADDED : டிச 06, 2025 05:37 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 9ம் தேதி திட்டமிட்டபடி விஜய் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
த.வெ.க., தலைவர் விஜய், புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி மறுத்த போலீசார், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து த.வெ.க.,வினர் நேற்று முன்தினம், வரும் 9ம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி சீனியர் எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர். அதன்பேரில் டி.ஐ.ஜி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் உப்பளம் துறைமுக மைதானத்தை ஆய்வு செய்து, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான வழிமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
நேற்று காலை த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன், ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் மீண்டும் உப்பளம் துறைமுகம் மைதானத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மைதானத்தின் ஒரு பகுதி புதர் மண்டி கிடந்ததோடு, மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது. அதனால், ெஹலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்தனர். உப்பளம் ெஹலிபேடு மைதானத்தில், பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்த த.வெ.க.,வினர், இதற்காக துறைமுகத் துறையிடம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, புதர் மண்டியும், சேறும் சகதியுமாக இருந்த மைதானத்தை 3 ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு சீரமைக்கும் பணியை துவங்கி, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
த.வெ.க., மனு
போலீஸ் பரிசீலனை
துறைமுகம் மைதானத்தை பார்வையிட்ட பொதுச் செயலாளர் ஆனந்த், பகல் 12:00 மணிக்கு சட்டசபைக்கு சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து 10 நிமிடம் பேசினார். பின்னர் வெளியே வந்த அவரிடம், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டதா என நிருபர்கள் கேட்டதற்கு, மனு பரிசீலனையில் உள்ளதாக கூறியபடி, காரில் ஏறிச் சென்றார். இதுகுறித்து சீனியர் எஸ்.பி.,யிடம் கேட்டபோது, த.வெ.க.,வினரின் மனுவை பரிசீலித்து வருகிறோம்' என்றார்.

