ADDED : செப் 04, 2025 12:22 AM

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்தார்.
திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானத்தில், நேற்று காலை 10:50 மணிக்கு திருச்சி வந்தார். அமைச்சர்கள் நேரு, மகேஷ், கலெக்டர் சரவணன் வரவேற்றனர்.
தொடர்ந்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். மீண்டும் மாலை 4:10 மணிக்கு திருச்சிக்கு வந்த ஜனாதிபதி, காரில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். காரில் செல்லும் வழியில் சாலையில் சென்ற குழந்தைகளுக்கு, சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தார்.
கோவிலுக்கு சென்ற ஜனாதிபதியை, மாவட்ட கலெக்டர் சரவணன் மற்றும் ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். ரங்கா ரங்கா கோபுரம் முன், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கோவில் அர்ச்சகர்கள் பூரணகும்ப மரியாதை அளித்தனர். கோவிலுக்குள் சென்ற ஜனாதிபதி, முதலில் சக்கரத்தாழ்வார், பெரிய பெருமாள் மற்றும் தாயார் சன்னிதிகளுக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து உடையவர் எனப்படும் ராமானுஜர் சன்னிதியில் வழிபாடு செய்தார். கோவிலை பற்றி கேட்டு தெரிந்து கொண்ட அவர், ''பிரமாண்டமான கோவிலை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. கோவில் நிரந்தரமான சந்தோஷத்தையும், சவுபாக்கியத்தையும் அளிக்கும்,'' என்றார்.