கூட்டணிக்கு வரக் கூறி அழுத்தமா?: சீமான் சொல்வது இது தான்!
கூட்டணிக்கு வரக் கூறி அழுத்தமா?: சீமான் சொல்வது இது தான்!
ADDED : பிப் 17, 2024 04:45 PM

சென்னை: 'நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு வர வேண்டும் (எந்தக் கூட்டணி என்று அவர் குறிப்பிடவில்லை) என்பதால் தான் விவசாயி சின்னம் ஒதுக்கப்படாமல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது' என அக்கட்சி தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது குறித்து சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேர்தல் விதிமுறை மற்றும் தேர்தல் வரைவுப்படி பார்த்தால் கரும்பு விவசாயி சின்னம் எனக்கு தான் கிடைக்க வேண்டும். முன்னதாக தேர்தலில் போட்டியிடுவதற்கு விவசாயி ஏர் உழும் சின்னம், வண்டி சக்கரம் சின்னங்களை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கேட்டேன். அது மாநில கட்சிக்கு கொடுத்திருக்கிறோம் அதனால் தர முடியாது என்று சொன்னார்கள்.
கரும்பு விவசாயி சின்னம்
தற்போது பக்கத்து மாநிலத்தை சேர்ந்த புதிதாக கட்சி ஆரம்பித்தவருக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள். அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்றே தெரியவில்லை. தேர்தல் தேதி அறிவித்து ஒரு வாரத்திற்கு பிறகு தான் எனக்கு சின்னம் ஒதுக்கினார்கள். நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் வேறு ஒருவருக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள். நாங்கள் வளர்ந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
7 சதவீதம்
நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு வர வேண்டும் என்பதனால் தான் விவசாய சின்னம் ஒதுக்கப்படாமல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. 7 சதவீதம் இருக்கும் வாக்கு வீதம் கூட்டணி வைத்தால் 0.7 சதவீதம் கூட கிடைக்காது. நீதிமன்றம் உறுதியாக விவசாயி சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க உத்தரவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. லோக்சபா தேர்தலில் விவசாயி சின்னத்தை பெறுவது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இவ்வாறு சீமான் கூறினார்.