ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு
ADDED : டிச 31, 2024 08:14 AM

சென்னை: அதானி நிறுவனம் குறைந்த விலை குறிப்பிட்டு இருந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களுக்கான டெண்டரை தமிழக மின்வாரியம் ரத்து செய்துள்ளது.
வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறையும்; தொழிற்சாலைகளுக்கு மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. அதன்படி, வீடுகளுக்கு மின் ஊழியர்கள் நேரில் சென்று, மீட்டரில் பதிவயாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, மின் கட்டண விபரத்தை, நுகர்வோரிடம் உள்ள கணக்கீட்டு அட்டையில் எழுதி தருகின்றனர். பின், அலுவலக கணினியில் பதிவேற்றம் செய்கின்றனர். அடுத்த சில தினங்களில், மின் கட்டண விபரம் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் அனுப்பப்படுகிறது.
தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவு மின் இணைப்புகளில் உள்ள மீட்டர்களில், தொலைதொடர்பு கருவி பொருத்தப்பட்டு, வாரியத்தில் உள்ள, 'சர்வர்' உடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, மாதந்தோறும் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வீடுகளிலும் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 3.03 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு, 'டெண்டர்' கோரப்பட்டது.
முதல் கட்டமாக வெளியிடப்பட்ட சர்வதேச டெண்டரில் 82 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வெவ்வேறு நிறுவனங்கள் டெண்டர் சமர்ப்பித்தன. அவற்றில் அதானி நிறுவனமே குறைந்தபட்ச விலை உடன் டெண்டர் கோரி இருந்தது. இதனால் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்புகள் இருந்தன.
இந்நிலையில், அதானி தமிழகம் வந்ததாகவும், முக்கிய புள்ளிகளை சந்தித்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பின. தமிழக அரசு அதானிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு சில கட்சியினரும், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்பினரும் குற்றம் சாட்டினர்.இத்தகைய பின்னணியில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை தமிழக மின்வாரியம் ரத்து செய்துள்ளது.