கிரைம்: கொலை வழக்கில் தேடப்பட்ட பாதிரியார் நீதிமன்றத்தில் சரண்
கிரைம்: கொலை வழக்கில் தேடப்பட்ட பாதிரியார் நீதிமன்றத்தில் சரண்
ADDED : ஜன 25, 2024 07:29 AM

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே மயிலோடு மடத்துவிளையை சேர்ந்தவர் சேவியர்குமார் 42. அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக செயல்பட்டார். இவரது மனைவி ஜெமினி மயிலோடு சர்ச் நிர்வாகத்துக்கு உட்பட்ட பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
சேவியர்குமாருக்கும் சர்ச் நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஜெமினி பணியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சென்ற சேவியர் குமார் சர்ச் வளாகத்தில் பாதிரியார் ராபின்சன் இல்லத்தில் கொலை செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிரியார் ராபின்சன் தலைமறைவாக இருந்தார். அவர் நேற்று துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை திருநெல்வேலி மத்திய சிறைக்கு அனுப்பவும், ஜன., 29 ல் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட் வரதராஜன் உத்தரவிட்டார்.
ரூ.400 கோடி மோசடி: நிதி நிறுவன இயக்குநர் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமை இடமாகக் கொண்டு 'ஆலயம்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது. டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டி உள்ளிட்ட கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்தனர். ரூ.400 கோடி வரை பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டது. 2022ல் நிதி நிறுவனத்தினர் தலைமறைவாகி விட்டனர்.
நிறுவனத்தின் இயக்குநரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்த சுரேஷை கைது செய்த போலீசார், மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
'மண்டை வெட்டி' மாதவன் கொடூரமாக வெட்டி கொலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மாதவன், 50. ரவுடியான இவர் மீது, மண்ணச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும், 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று காலை, திருச்சி, திருவானைக்காவல் சன்னிதி தெருவுக்கு பின்புறம் உள்ள தீட்சிதர் தோப்பில், மாதவன் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஸ்ரீரங்கம் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இளம்பெண் குறித்து அவதுாறு: அகாடமி உரிமையாளர் கைது
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அர்த்தநாரீஸ்வரர் ஐ.ஏ.எஸ்., அகாடமி என்ற பெயரில், சீதாராம்பாளையத்தை சேர்ந்த அஸ்வின், 30, என்பவர் பயிற்சி மையம் நடத்துகிறார். இங்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள் படிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன், அப்பயிற்சி மையத்தில் படிக்க வந்த பெண்ணிடம், இவரது உறவுக்கார பெண்ணின் நடத்தை குறித்து அஸ்வின் அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை, அஸ்வினை சந்தித்து கேட்ட போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், அஸ்வினை பிடித்து திருச்செங்கோடு நகர போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், அவரின் மொபைல் போனை பறிமுதல் செய்து பார்த்தனர். அதில் சில பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், போனில் பேசிய பதிவுகள் இருந்தன.
இதையடுத்து, பெண்ணின் தந்தை கொடுத்த புகார்படி, திருச்செங்கோடு நகர போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஸ்வினை ஆஜர்படுத்தினர். நீதிபதி சுரேஷ்பாபு விசாரித்து, அஸ்வினை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பூட்டிய வீட்டில் 30 பவுன், ரூ.20 ஆயிரம் கொள்ளை
சிவகாசி பொதிகை நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் 60, அச்சகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா. இரு மகன்களில் ஒருவர் வெளிநாட்டிலும், மற்றொருவர் வெளியூரிலும் வேலை பார்த்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன் ஜெகநாதன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 30 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிந்தது. வீட்டில் ஆய்வு செய்த போது, வீட்டின் பின்பக்கம் இருந்த ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
மணிப்பூரில் வீரர் வெறிச் செயல்; 6 பேரை சுட்டு தற்கொலை
அசாம் ரைபிள்ஸ் படை வீரர் ஒருவர் சக ஊழியர்கள் ஆறு பேரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர்கள் காயம் அடைந்த நிலையில், அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மணிப்பூரில் அரங்கேறிஉள்ளது.