பின் தங்கிய மக்கள் வளர்ச்சியில் பிரதமர் ஆர்வமாக உள்ளார்: மத்திய இணை அமைச்சர் முருகன்
பின் தங்கிய மக்கள் வளர்ச்சியில் பிரதமர் ஆர்வமாக உள்ளார்: மத்திய இணை அமைச்சர் முருகன்
UPDATED : ஜன 16, 2024 01:45 AM
ADDED : ஜன 15, 2024 07:39 PM

பிரதம மந்திரியின் மலைவாழ் பழங்குடியினர் நலன் காக்கும் பெருந்திட்டம் பி.எம்., ஜன்மன் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு, இலவச வீடு கட்டும், முதல் கட்ட நிதியை, பிரதமர் மோடி இன்று, வழங்கினார். திட்டம் குறித்து, மலைவாழ் மக்களிடம் காணொளி மூலம் உரையாடினார்.
இந்நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சி, மண்வயல் சமுதாயக்கூடத்தில், பழங்குடி மக்கள் காணொளி மூலம் பார்க்க ஏற்பாடுகள் செய்திருந்தனர். பழங்குடியினருடன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் நிகழ்ச்சியை பார்த்தார்.
தொடந்து, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்ஷினி தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்று, 50 பயனாளிகளுக்கு 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட
உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஸ்ரீமதுரை ஊராட்சித் தலைவர் சுனில், மருத்துவ சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, கூடலூர் ஆர்.டி.ஒ. முகமது குதிரத்துல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய இணை அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக ஜன்மன் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் பழங்குடி மக்களின் அடிப்படை வசதிக்காக 24 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பழங்குடி மக்கள் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி, அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. 'நாடு வளர்ச்சி அடைய பின் தங்கிய மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும்' என்பதை பிரதமர் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் தமிழ் மொழி, கலாச்சாரத்தின் மீது மிகுந்த பற்றுடன் உள்ளார். டில்லியில், என் வீட்டில் பொங்கல் விழாவை, தமிழ் கலாச்சாரத்துடன் கொண்டாடினார். காசி தமிழ் சங்கமம் இரண்டு முறையும்; சௌராஷ்டிரா தமிழ் சங்கம் ஒரு முறையும் நடத்தப்பட்டுள்ளது. பாரதியாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில், அவருக்கு சிறப்பு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளை 35 வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.இவ்வாறு, இணை அமைச்சர் முருகன் கூறினர்.
தொடர்ந்து, மண்வயல் மாதேஸ்வரன் கோவில் சென்ற மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து பா.ஜ., நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் இணைந்து கோவில் வளாகத்தை சுத்தம் செய்தார்.