தீர்த்த நீராடி, ராமாயண பாராயணம் கேட்டு, ராமேஸ்வரத்தில் வழிபட்ட மோடி
தீர்த்த நீராடி, ராமாயண பாராயணம் கேட்டு, ராமேஸ்வரத்தில் வழிபட்ட மோடி
UPDATED : ஜன 20, 2024 10:18 PM
ADDED : ஜன 20, 2024 03:43 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பிரதமர் மோடி புனித நீராடினார். ராமநாத சுவாமி கோயிலில் ராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி மனமுருகி கேட்டார். முன்னதாக, மஹாலட்சுமி, காயத்ரி, யமுனா உள்ளிட்ட 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடினார்.
பின்னர் அவர் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய சாலை வழியாக காரில் சென்ற போது, சாலையெங்கும் பூக்கள் தூவி பா.ஜ.,வினர் வரவேற்றனர்.
பேட்டரி காரில் பயணித்த மோடி
பின்னர், பிரதமர் மோடி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில், புனித நீர் தெளித்து சுவாமி தரிசனம் செய்ய ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார். முன்னதாக, அக்னி தீர்த்த கடற்கரையில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
ராமாயண பாராயணம் கேட்டார் மோடி
ராமநாத சுவாமி கோயிலில் புனித நீராடிய பின் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கோயில் வளாகத்தில் புதிய ஆடை அணிந்து கொண்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன் அமர்ந்து பயபக்தியுடன் மோடி சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் நடைபெற்ற ராமாயணப் பாராயணம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், எட்டு வெவ்வேறு பாரம்பரிய மண்டலிகள் சமஸ்கிருதம், அவாதி, காஷ்மீரி, குருமுகி, அஸ்ஸாமி, பெங்காலி, மைதிலி மற்றும் குஜராத்தி ராம்கதாக்களை (ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பிய அத்தியாயத்தை) பாராயணம் செய்தார்கள். அப்போது பிரதமர் ருத்ராட்ச மாலையை அணிந்து இருந்தார்.
மோடிக்கு கை காட்டிய மூதாட்டி!
வழியெங்கும் காத்திருந்த பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி கை அசைத்த படி சென்றார். கும்பிட்ட மோடிக்கு, மகிழ்ச்சியுடன் கை காட்டினார் மூதாட்டி ஒருவர். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.