UPDATED : ஜன 17, 2024 02:17 AM
ADDED : ஜன 16, 2024 09:57 PM

பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுதினம்(ஜன.,19) பெங்களூரு வருகிறார். இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், பேரணி நடத்தவும் வாய்ப்புள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், ஜனவரி 19ல் பெங்களூருக்கு வருகை தருகிறார். நகரின் ஏரோஸ்பேஸ் பொறியியல் கல்லுாரிக்கு பிரதமர் வருகிறார். இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்.
இதற்கு முன், சந்திரயான் வெற்றியை முன்னிட்டு, பெங்களூரின் இஸ்ரோ அலுவலகத்துக்கு பிரதமர் வருகை தந்தபோது, தொண்டர்கள், தலைவர்களை சந்திக்கவில்லை. அது அரசு நிகழ்ச்சியாக இருந்ததால், கட்சி சம்பந்தப்பட்ட தலைவர்களை சந்திப்பதை தவிர்த்தார்.
ஜனவரி 19ல் பெங்களூரின் எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்திறங்கும் பிரதமருக்கு, அமோக வரவேற்பு அளிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு அல்லது சாம்ராஜ் நகரில், பெரிய அளவில் ஊர்வலம் நடத்த வேண்டும் என, பா.ஜ.,வினர் ஆலோசிக்கின்றனர். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து, இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. நிகழ்ச்சிக்கு இரண்டே நாட்கள் இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது கஷ்டம் என்பதால், ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பது சந்தேகம் என, கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு உற்சாகத்துடன் தயாராகும் பா.ஜ., தன் வெற்றிக்கு, பிரதமர் மோடியை அதிகமாக நம்பியுள்ளது. அவர் கர்நாடகாவில் அதிகமாக பிரசாரம் செய்தால், கட்சிக்கு யானை பலம் கிடைக்கும் என, மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
பிரதமர் வருகை காரணமாக, ஜனவரி 19ல் நடக்கவிருந்த பா.ஜ., செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு வரவேற்பளிப்பது குறித்து, மாநில தலைவர் விஜயேந்திரா உட்பட, முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.