சென்னையை சேர்ந்த பிரக்ரித் அறிவகம், கூடுகள் அறக்கட்டளைக்கு பிரதமர் பாராட்டு: அண்ணாமலை நன்றி
சென்னையை சேர்ந்த பிரக்ரித் அறிவகம், கூடுகள் அறக்கட்டளைக்கு பிரதமர் பாராட்டு: அண்ணாமலை நன்றி
UPDATED : நவ 24, 2024 03:37 PM
ADDED : நவ 24, 2024 03:35 PM

சென்னை: ' மன் கி பாத் ' நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த பிரக்ரித் அறிவகம், கூடுகள் அறக்கட்டளை பற்றி பிரதமர் மோடி பாராட்டி பேசியிருந்தார். இதற்காக அவருக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து உள்ளார்.
பாராட்டு
'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சென்னையில் ஸ்ரீராம் கோபாலன் என்ற பொறியாளர் செயல்படுத்தும் 'பிரக்ரித் அறிவகம்' நூலக திட்டத்தை பாராட்டி பேசினார். இங்குள்ள 3 ஆயிரம் புத்தகங்களை குழந்தைகள் படிப்பதாகவும், இதனுடன் நினைவுத்திறன் பயிற்சி, கதை சொல்லல் பயிற்சி உள்ளிட்ட குழந்தைகள் திறனை வளர்க்கப்படுவதாக பாராட்டி இருந்தார்.
மேலும், சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை அதிகரிக்க, பள்ளிக் குழந்தைகளைத் தங்கள் இயக்கத்தில் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார்கள். சிட்டுக்குருவி கூட்டை எவ்வாறு அமைத்துக் கொடுப்பது என்பது தொடர்பான பயிற்சிகளை அளிக்கிறார்கள். கூடுகள் அறக்கட்டளையின் இந்த முயற்சி காரணமாக சிட்டுக்குருவியின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது எனவும் பிரதமர் பாராட்டி இருந்தார்.
நன்றி
இதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
குழந்தைகள் மத்தியில் புத்தகம் வாசிப்பை ஏற்படுத்துவதற்காக 'பிரக்ரித் அறிவகம்' என்ற திட்டத்தை துவக்கி தன்னலமற்ற சேவை ஆற்றும் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கோபாலனை பாராட்டிய பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
போட்டி
குழந்தைகளுக்காக மட்டும் பிரத்யேகமாக 3 ஆயிரம் புத்தகங்களுடன் நூலகம் அமைத்ததுடன், அதனை படிக்க தூண்டும் விதமாக குழந்தைகள் மத்தியில் ஆரோக்கியமான போட்டியை நடத்துகிறார். இதனுடன் கதை சொல்லல், கலைப்படைப்பு, நினைவாற்றல் பயிற்சி, பேச்சு பயிற்சி, ரோபோடிக்ஸ் போன்ற அறிவுப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடுத்துகிறார்.
அதிகரிப்பு
தமிழகத்தில், அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை மீட்டெடுக்க பள்ளி மாணவர்களுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த கூடுகள் அறக்கட்டளைக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
பள்ளிகளுக்கு சென்று, நமது அன்றாட வாழ்க்கையில் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும், சிட்டுக்குருவி கூடுகள் உருவாக்க வும் இந்த அமைப்பு கற்றுக் கொடுக்கிறது. அவர்களின் முயற்சி காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளில் கூடுகள் அறக்கட்டளை 10 ஆயிரம் கூடுகளை தயார் செய்து சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.