தமிழில் பிரதமரின் வாழ்த்து கடிதம்; மத்திய அரசு திட்ட பயனாளிகள் மகிழ்ச்சி
தமிழில் பிரதமரின் வாழ்த்து கடிதம்; மத்திய அரசு திட்ட பயனாளிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 17, 2024 06:54 AM

திருப்பூர் : 'மானிய திட்டம் உங்கள் கனவை நனவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. பிரகாசமான எதிர்காலம் மலரட்டும்' என, பிரதமரின் வாழ்த்து கடிதம் தமிழில் அனுப்பப்படுவதால், பயனாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய அரசின், 'பிரதமர் ஆவாஸ் யோஜனா' திட்டத்தில், நகர்ப்புற கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தால், வீடு கட்டிய பயனாளிகளுக்கு, வட்டி மானியமாக, 2.60 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டது.
இதன் வாயிலாக, வீட்டுக்கடன் மீதான சுமை வெகுவாக குறைந்ததாக, பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோன்ற மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளுக்கு, பிரதமர் மோடி கையொப்பமிட்ட, ராஜ முத்திரையுடன் கூடிய, வாழ்த்துக்கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது.
'உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர வாழ்த்துகிறேன்' என்ற ஆங்கில புத்தாண்டு வாழ்த்துடன் கடிதம் துவங்குகிறது.
'பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டிய உங்களுக்கு இணைக்கப்பட்ட வட்டி மானிய திட்டம், உங்கள் கனவை நனவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு குடும்பம், தனது வீட்டை மையமாக வைத்து மட்டுமே வாழ்க்கையின் கனவுகளை நோக்கி பயணிக்கிறது. பெண்களின் அதிகாரம் மற்றும் குழந்தைகளின் பென்னான எதிர்காலத்தையும் உறுதி செய்கிறது.
'வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், செழிப்புடனும் இருக்கட்டும்; உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்ல ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான எதிர்காலம் மலர வாழ்த்துகள்' என, முடிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கடிதம் பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.