UPDATED : ஜன 08, 2025 02:01 PM
ADDED : ஜன 08, 2025 11:39 AM

சென்னை: 'போராட்டம் நடத்த முன் அனுமதி அவசியம். நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய ஆளும் கட்சியை சேர்ந்த தி.மு.க.,வினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது. அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது, பா.ம.க.,எம்.எல்.ஏ., ஜி.கே மணி பேசியதாவது: போராட்டத்திற்கு அனுமதி தரப்படுவதில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் பெரிய அதிர்வலை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால் இது போதாது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் விளக்கம்
அப்போது முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது: போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னால், முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். அதுவும் அனுமதி கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் மட்டும் தான் அனுமதி கொடுக்க முடியும். நேற்றைக்கு கூட, ஆளுங்கட்சியாக இருக்க கூடிய தி.மு.க., சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து இருக்கிறது.
திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும். ஆளுங்கட்சியாக இருந்தாலும், தி.மு.க.,வினர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது என்பதை பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே மணிக்கு எடுத்து சொல்லுங்கள். பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக விவாத நேரத்தில் எதிர்க்கட்சியினர் பேசியதாவது:
* வேந்தர் என்ற முறையில் அண்ணா பல்கலை விவகாரத்திற்கு கவர்னர் பொறுப்பேற்க வேண்டும்: வேல்முருகன், த.வா.க., எம்.எல்.ஏ.,
* மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு துணை வேந்தரை நியமிக்காததே காரணம்: ஈஸ்வரன், கொ.ம.தே.க., எம்.எல்.ஏ.,
* அண்ணா பல்கலை முடங்கியிருப்பதற்கு கவர்னரே காரணம்: சிந்தனைச்செல்வன், வி.சி.க., எம்.எல்.ஏ.,
* பாலியல் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: காந்தி, பா.ஜ., எம்.எல்.ஏ.,
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: நேற்று போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் கைது செய்யப்படவில்லை. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரை திட்டமிட்டு தாக்கி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.