ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை: சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை: சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
UPDATED : நவ 14, 2024 04:10 PM
ADDED : நவ 14, 2024 04:08 PM

சென்னை: '' ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும்,'' என எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் செந்தில்குமார் அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கில், நீதிமன்றங்களுக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.அவர் நீதிபதிகளிடம், ' அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளின் புள்ளி விவரம், தற்போதைய நிலை ஆகியவற்றை அளிக்க வேண்டும். ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, தமிழகம் முழுதும் சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் விவரங்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை கண்காணிக்க வேண்டும் என பதிவாளர் அல்லிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டனர்.