முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள் ஒருமுறை ரேகை பதிவு செய்தால் போதும்
முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள் ஒருமுறை ரேகை பதிவு செய்தால் போதும்
ADDED : ஜூன் 18, 2025 11:16 PM
சென்னை,:ரேஷன் கடைகளில் விரைவாக பொருட்களை வழங்க, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்கள், இரு முறைக்கு பதில், ஒருமுறை மட்டும் கைரேகை பதிவு செய்யும் வசதி துவக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 93 லட்சம் முன்னுரிமை; 18.65 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன.
5 கிலோ அரிசி
அதன்படி, முன்னுரிமை பிரிவுக்கு, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசியும்; அந்தியோதயா பிரிவுக்கு, 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இரு பிரிவினரும், அரிசிக்கு பதில் குறிப்பிட்ட எடையில் கோதுமை வாங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கான அரிசி, கோதுமையை, மத்திய அரசு இலவசமாக ஒதுக்கீடு செய்கிறது.
முன்னுரிமையற்ற அரிசி பிரிவில் உள்ள 1.10 கோடி கார்டுதாரர்களுக்கு, மாதம் வழங்கப்படும் 20 கிலோ அரிசிக்கான செலவை மட்டும் தமிழக அரசு ஏற்கிறது.
இந்த மூன்று பிரிவு கார்டுதாரர்களுக்கும் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என்ற குறைந்த விலையில், தமிழக அரசு வழங்குகிறது.
எனவே, முன்னுரிமை, அந்தியோதயா பிரிவினருக்கு, ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில், அரிசி, கோதுமைக்கு ஒருமுறையும், சிறப்பு பொது வினியோக திட்டத்திற்கு ஒருமுறையும் என, இரண்டு முறை கைரேகை பதிவு செய்து, 'ஆதார்' சரிபார்க்கப்படுகின்றன.
அடிக்கடி, 'சர்வர்' பிரச்னையால், கைரேகை பதியும்போது ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், நீண்ட நேரம் கடைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், கார்டுதாரர்கள் சிரமப்பட்டனர்.
எனவே, விரைவாக பொருட்களை வழங்க முன்னுரிமை, அந்தியோதயா பிரிவினருக்கு, ஒருமுறை மட்டும் கைரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.
இருமுறை பதிவு
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முன்னுரிமை, அந்தியோதயா பிரிவினருக்கு, மத்திய தொகுப்புக்கு ஒரு பில் போட்டும், மாநில தொகுப்புக்கு ஒரு பில் போட்டும் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால், இருமுறை கைரேகை பதிவு செய்யப்பட்டது.
'இனி இந்த பிரிவினர், ஒருமுறை கைரேகை பதிவு செய்தாலே, அனைத்து பொருட்களும் வழங்கும் வகையில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தாமதமின்றி விரைவாக பொருட்கள் வழங்கப்படும்' என்றார்.