ADDED : டிச 10, 2024 05:58 AM

சென்னை : உணவகங்கள் நடத்துவோரின் சிறு குற்றங்களுக்கு, சிறை தண்டனை விதிப்பதை நீக்கி, அபராதம் மட்டும் விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உணவு நிறுவனங்கள் சட்டம், 1958ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில், சில வகை சிறு குற்றங்களுக்கு, சிறை தண்டனை வழங்க வழி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
இதில், உணவகங்கள் தொடர்பான சிறு குற்றங்களுக்கு, 5,000 ரூபாயாக இருந்த அபராதத்தை, 10,000 ரூபாய் வரை உயர்த்த வழி செய்யப்பட்டுள்ளது. உணவு நிறுவன பணியாளர்களின் பணி நிபந்தனைகளை முறைப்படுத்தவும், உணவகம் தொடர்பான சிறு குற்றங்களுக்கு, சிறை தண்டனை விதிப்பதற்கு பதில், அபராதம் மட்டும் விதிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

