சிறையிலிருந்து கூட்டாளிகளை இயக்கும் கைதிகள் உளவு அமைப்பு அதிகாரிகள் விசாரணை
சிறையிலிருந்து கூட்டாளிகளை இயக்கும் கைதிகள் உளவு அமைப்பு அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜன 17, 2024 11:46 PM
சென்னை:தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுடன், 'வாட்ஸாப்' அழைப்பில் தொடர்பு கொண்டது குறித்து, மத்திய உளவு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, புழல் மத்திய சிறை, 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு, தண்டனை கைதிகள் சிறையில், உயர் பாதுகாப்பு, 'செல்' எனும், 'பிளாக்' உள்ளது. இதில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிறையில், இலவம் பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட, ேஹாம் தியேட்டர், விதவிதமான ஸ்மார்ட் போன்கள், வெளிநாட்டு மது வகைகள் என, சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கூறப்படுகிறது. இவர்கள், 2018ல், சிறையில் இருந்தபடி, குடும்பத்தாருடன், 'வாட்ஸாப்'பில், வீடியோ அழைப்பில் பேசினர். சிறைகளில் இருந்து, வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகளை தொடர்பு கொண்டனர்.
இதுகுறித்து, மத்திய உளவு அமைப்பான ஐ.பி., அதிகாரிகள் விசாரித்து சிறைத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கைதிகள் நடத்திய சொகுசு வாழ்க்கை குறித்த படங்களையும் வெளியிட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில் சோதனை நடத்தி, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது மீண்டும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் வேலையை துவங்கி உள்ளனர். இதுகுறித்து, ஐ.பி., அதிகாரிகள் மீண்டும் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'சென்னை மற்றும் திருச்சி சிறைகளில் இருந்து, வெளிநாடுகளில் உள்ள, சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு, 'வாட்ஸாப்' அழைப்பு சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து, இலங்கைக்கு போதை பொருள் கடத்தல் நடக்க இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
'கடத்தலை, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல் கைதிகள் தங்கள் கூட்டாளிகள் வாயிலாக அரங்கேற்றலாம் என, சந்தேகம் வலுக்கிறது. அதுபற்றி விசாரித்து வருகிறோம்' என்றனர்.