வெள்ளத்தில் சிக்கிய தனியார் பஸ்; பயணிகளை மீட்ட கிராம மக்கள்
வெள்ளத்தில் சிக்கிய தனியார் பஸ்; பயணிகளை மீட்ட கிராம மக்கள்
ADDED : டிச 13, 2024 10:48 AM

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய தனியார் பஸ்சில் இருந்த பயணிகளை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.
இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், உபரி நீர் கிளியாற்று வழியாக கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் தனியார் பஸ் ஒன்று சிக்கிக் கொண்டது. சுற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனைக் கண்ட கிராம மக்கள் பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பஸ் நீண்ட நேரம் போராடி மீட்கப்பட்டது.

