தனியார் பஸ் ஓட்டுனர்களின் 'உயிர் விளையாட்டு!'; உயிரை கையில் பிடித்தபடி மக்கள் திகில் பயணம்
தனியார் பஸ் ஓட்டுனர்களின் 'உயிர் விளையாட்டு!'; உயிரை கையில் பிடித்தபடி மக்கள் திகில் பயணம்
ADDED : அக் 29, 2024 04:56 AM

கோவை,: 'டைமிங்' பிரச்னையால், உயிர்களை துச்சமாக மதித்து ஒரு பஸ் மீது இன்னொரு பஸ்சை மோத வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆனால், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுகிறது.
அரசு, தனியார் டவுன்பஸ்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக தனியார் பஸ்களின் நடவடிக்கையால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது அதிகரித்து வருகிறது.
பஸ்கள் இடையே இருக்கும் போட்டியால், முக்கிய ரோடுகளில், பிற வாகன ஓட்டிகள் குறித்து கவலைப்படாமல், அசுர வேகத்தில் பஸ்களை இயக்குவது, அதிக ஒலி எழுப்பியவாறு செல்வது, வழிவிடாத வாகனங்களை இடிப்பது போல் செல்வது, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஓட்டுனர்கள் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், கோவை வடவள்ளி - ஒண்டிப்புதூர் வரை சென்ற இரு தனியார் பஸ் ஓட்டுனர்கள், போட்டி போட்டுக் கொண்டு, அசுர வேகத்தில் பஸ்களை இயக்கினர். இதைக்கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஒதுங்கினர்.
ஆர்.எஸ்.புரம் பால் கம்பெனி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு வரை சென்றது. இறுதியில், பஸ்களை இயக்காமல் பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டனர்.
டிக்கெட் எடுத்த பயணிகள், திட்டித்தீர்த்தபடி வேறு பஸ்ஸில் சென்றனர். குறிப்பாக, பெண் பயணிகள், வயோதிகர்கள், பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
டைமிங் பிரச்னை
சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில், தனியார் பஸ் டிரைவர்கள், டைமிங் பிரச்னையால், அடிக்கடி தகராறு செய்து, பேருந்துகளை இயக்காமல் நடுரோட்டில் நிறுத்தி விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களோ தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர்.
இது முதல் முறை அல்ல
இதற்கு முன் இதே வழித்தடத்தில் இயங்கிய, இரு தனியார் பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு முந்த முயற்சித்தன.
அப்போது, ஒரு தனியார் பஸ் மற்றொரு தனியார் பஸ் மீது மோதும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
பயணிகளின் உயிரை மதிக்காமல், டிரைவர்கள் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பஸ்களின் பர்மிட்டை ரத்து செய்ய, அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரிய தொகை கைமாறி இருக்கலாம் என்பது போன்ற சந்தேகங்களுக்கு, அதிகாரிகளின் இந்த மவுனம் வித்திடுகிறது.
இதுகுறித்து, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பாலமுருகன் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட பஸ் உரிமையாளர்களிடம், இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் பெற்று, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன் அடிப்படையில், பஸ் பெர்மிட் ரத்து செய்வது குறித்து, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்,'' என்றார்.