சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி தனியார் பள்ளிகள் கோரிக்கை
சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி தனியார் பள்ளிகள் கோரிக்கை
UPDATED : நவ 13, 2026 08:36 PM
ADDED : நவ 13, 2026 08:34 PM
சென்னை: ‘பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, அனுமதி வழங்க வேண்டும்’ என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு, தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கப் பொதுச் செயலர் நந்தகுமார், அமைச்சர் ராஜ்மோகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை, பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தவும், அவர்கள் தவறான வழியில் செல்லக் கூடாது என்பதற்காகவும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. யாரோ தரும் தவறான தகவல்களை மையமாக வைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, அமைச்சர் கூறுவதை, பெற்றோர் விரும்பவில்லை.
பொதுத் தேர்வுக்கு, இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இப்போது, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தினால்தான், அவர்கள் வெற்றி பெறுவர்.
தேசிய விடுமுறை நாட்களில், நிச்சயம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சிறப்பு வகுப்புகளை நடத்த மாட்டோம் என, உறுதி கூறுகிறோம். எனவே, மாணவ, மாணவியரின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட, சிறப்பு வகுப்புகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
