ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு: மதுக்கடைகள் மீண்டும் திறப்பு
ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு: மதுக்கடைகள் மீண்டும் திறப்பு
ADDED : மே 30, 2026 01:46 AM
-- நமது நிருபர் குழு - காலி பாட்டில்களை திரும்ப பெற எதிர்ப்பு தெரிவித்து, நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடிய நிலையில், நேற்று முதல் மீண்டும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.
மதுபான பாட்டிலில், கடை விபரத்துடன் கூடிய ஸ்கேன் செய்யும் வகையிலான ஸ்டிக்கர் ஒட்டி, 10 ரூபாய் கூடுதலாக பெற்று, டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விற்பனை செய்கின்றனர். அந்த பாட்டிலை அதே கடையில் திரும்ப வழங்கினால், 10 ரூபாயை திரும்ப வழங்குவர்.
இவ்வாறு பாட்டிலை திரும்ப பெறுவதில் சிரமம் உள்ளது. 10 ரூபாய் சில்லறையாக கிடைப்பதில்லை.
பெரும்பாலான பாட்டில்கள் அசுத்தமாக வருவதால், அவற்றை தொட முடியவில்லை.
பாட்டிலை திரும்ப பெறுவதை, வேறு ஏஜென்சி மூலம் பெற வேண்டும் என, டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தி, போராட்ட அறிவிப்பு செய்தனர்.
இந்த விவகாரத்தால், மே 24 முதல், 4 நாட்களாக, சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் சென்னையில் மாநில அளவிலான சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சில், 'இக்கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்ற, ஒரு மாதம் அவகாசம் தேவை.
'அதுவரை வழக்கம் போல கடையை திறந்து, பாட்டில்களை திரும்ப பெற வேண்டும். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பிற போராட்டங்களை பற்றி பேசலாம்' என, அறிவுறுத்தியது. இதை ஏற்று நேற்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை நேற்று மீண்டும் திறக்க முற்பட்ட போது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர்.
