ADDED : ஆக 20, 2026 11:10 PM
சென்னை: பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ 'பாஸ்போர்ட் சேவா' இணையதளம் செயல்படுகிறது.
இதில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையை செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார், கல்வித் தகுதி சான்றிதழ் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்நிலையில், இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்கும்போது, பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக விண்ணப்பித்து கொண்டிருக்கும் போதே இணையதளம் திடீரென துண்டிக்கப்படு கிறது. விண்ணப்பதாரர் ஏற்கனவே உள்ளீடு செய்த அனைத்து தரவுகளும் முழுமையாக அழிந்து, மீண்டும் புதிதாக பதிவேற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இது குறித்து, பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் கூறியதாவது:
பணம் செலுத்தியதற்கான ரசீது கிடைக்காமல் போவது, விண்ணப்ப எண் வராமல் முடங்குவது மற்றும் ஒப்புதல் குறுஞ்செய்தி வராமல் தவிப்பது போன்ற சிக்கல்கள் தொடர்கின்றன. இவற்றை உடனடியாக சரி செய்து, தடையில்லா சேவை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
