சொத்தையான காரணம் கூறி பத்திரங்களை நிராகரிக்கும் சார் - பதிவாளர் மீது நடவடிக்கை
சொத்தையான காரணம் கூறி பத்திரங்களை நிராகரிக்கும் சார் - பதிவாளர் மீது நடவடிக்கை
ADDED : செப் 30, 2024 04:56 AM

சென்னை : பதிவுக்காக வந்த பத்திரங்களில், திருப்பி தராமல் நிலுவையில் வைத்தவை, சொத்தையான காரணங்களை கூறி நிராகரித்தவை குறித்து, சார் - பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும்படி, மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், சார் - பதிவாளர் அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. இதில், முறையாக கட்டணம் செலுத்தி, டோக்கன் பெற்றாலும், தரகர்கள் வாயிலாக தாக்கலாகும் பத்திரங்களை பதிவு செய்யவே, சார் - பதிவாளர்கள் முன்னுரிமை தருவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் தான், பதிவாகும் பத்திரங்களின் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிமுறைப்படி, பதிவு முடிந்த பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் உடனுக்குடன் திருப்பித்தர வேண்டும். ஆனால், எவ்வித காரணமும் இன்றி, சார் - பதிவாளர் அலுவலகங்களில், 10 நாட்கள் வரை பத்திரங்களை நிலுவையில் வைப்பதும்; பதிவுக்கு தகுதியான பத்திரங்களை திருப்பி அனுப்புவதும் தெரியவந்துள்ளது.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும், மொத்தம் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களை, எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து, நிர்வாக மாவட்ட பதிவாளர், தணிக்கை மாவட்ட பதிவாளர் ஆகியோர் திடீர் சோதனை நடத்த வேண்டும்.
திருப்பித்தராத பத்திரங்கள் குறித்து விசாரித்து, உடனடியாக திருப்பி கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். சொத்தையான காரணங்களை கூறி, திருப்பி அனுப்பப்பட்ட பத்திரங்கள் குறித்தும் ஆராய வேண்டும்.
இந்த விபரங்களை வாரந்தோறும், தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். தவறான காரணங்கள் அடிப்படையில், பத்திரங்களை திருப்பி அனுப்பிய சார் - பதிவாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான உத்தரவு, மாவட்ட பதிவாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.