ADDED : செப் 20, 2025 02:05 AM
சென்னை:'பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது' என, 2021ம் ஆண்டு வேளாண் பட்ஜெட் அறிவிப்புக்கு உயிர் கொடுக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவு:
கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் தமிழக வேளாண் பல்கலை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. பனை தொழிலை நம்பி, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பனை பொருட்கள் ஏற்றுமதி வாயிலாக, அன்னிய செலாவணியும் அரசுக்கு கிடைத்து வருகிறது.
பரிந்துரைப்பர் அதே நேரத்தில், பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, பனை மரங்களை வெட்டுவது தடை செய்யப்படுகிறது. தவிர்க்க முடியாத சூழலில், பனை மரங்களை வெட்ட வேண்டும் என்றால், அரசின் அனுமதி பெற வேண்டும்.
இதற்காக, மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையிலும், வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. வட்டார அளவிலான குழுவினர், வயல்களில் ஆய்வு செய்து, பனை மரங் களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, பதிவேடு தயாரித்து பராமரிக்க வேண்டும்.
தனி நபர் அல்லது நிறுவனங்கள் பனை மரங்களை வெட்டுதற்கு, வேளாண் துறையின், 'உழவன்' செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், வட்டார அளவிலான குழுவினர் ஆய்வு செய்து, மாவட்ட அளவிலான குழுவிற்கு பரிந்துரைப்பர்.
மாவட்ட கலெகடர் தலைமையிலான குழு அனுமதி அளித்தாமல் மட்டுமே, பனை மரங்களை வெட்ட முடியும். ஒரு பனை மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாக, 10 பனை மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனுமதி கடிதம் மாவட்ட அளவிலான குழு, ஒரு மாதத்திற்குள் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். வெட்டப்பட்ட பனை பாகங்களை எடுத்து செல்லும்போது, தோட்டக்கலை இயக்குநர் வாயிலாக வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூப்பட்டுள்ளது.

