மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்: கமல் மீண்டும் உதிர்த்த கருத்து
மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்: கமல் மீண்டும் உதிர்த்த கருத்து
ADDED : ஜூலை 06, 2024 04:45 PM

சென்னை: ‛‛கள்ளச்சாராயம் வருவதற்கான காரணமே மதுவிலக்கு தான்; மதுவிலக்கு கொண்டு வைத்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்'' என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அப்போது சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல், ‛‛மது குடிக்க வேண்டாம் என்று சொல்வதை விட அளவோடு மது குடிக்க அறிவுரை வழங்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என சொல்லாமல், அளவோடு குடிக்க சொல்வதாக கமல் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், அவர் நடித்த ‛இந்தியன்-2' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் கள்ளச்சாராயம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கமல் அளித்த பதில்: கள்ளச்சாராயத்தை பற்றி பல இடத்தில் கூறியுள்ளேன். கள்ளச்சாராயம் வருவதற்கான காரணமே மதுவிலக்கு தான். இது உடலுக்கு கெடுதல் என அனைவருமே மனதில் முடிவு செய்ய வேண்டும். விஷம் இது தான், இதனை உண்ணக்கூடாது என்னும் உணர்வு பொதுவெளியில் வர வேண்டும். அப்போது தான் இது போகும். மதுவிலக்கு பண்ணிவைத்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும். அதனால் கள்ளச்சந்தைகள் பெருகும், கள்வர்கள் பெருகுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.