வைகை, பேச்சிப்பாறை, அமராவதி, மேட்டூர் அணைகளை துார்வார திட்டம்; ரூ.3.62 கோடி ஒதுக்க அரசாணை வெளியீடு
வைகை, பேச்சிப்பாறை, அமராவதி, மேட்டூர் அணைகளை துார்வார திட்டம்; ரூ.3.62 கோடி ஒதுக்க அரசாணை வெளியீடு
ADDED : ஆக 06, 2024 05:36 AM

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வைகை, பேச்சிப்பாறை, அமராவதி, மேட்டூர் அணைகளை துார்வார அரசாணை வெளியிடப்பட்டு முதற்கட்ட செலவுகளுக்காக ரூ.3 கோடியே 62 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில் வைகை அணை உட்பட பல்வேறு அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை துார்வாரி நீர்தேக்கும் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. வைகை அணையில் துார்வாருவதற்கு திட்டமதிப்பீடு 3 முறை தயாரித்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் 2022 ஆக., 23 தேதிக்கான திட்டப்படி மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை மற்றும் 4 அணைகளை துார்வார ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்படி திட்ட வடிவமைப்புக்கான தலைமை பொறியாளர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தலைமையில் மறு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
வைகை அணை
கடந்த 2012 கணக்கெடுப்பின் படி வைகை அணையில் 32.065 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு வண்டல் படிந்துள்ளது. முதற்கட்டமாக மூன்றாண்டுகள் படிப்படியாக 11.31 மெட்ரிக் கியூபிக் மீட்டர் வண்டல் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அரசாணை 50ன்கீழ் விவசாயிகளுக்கு 2.1 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு மண் இலவசமாக வழங்கப்படும். மீதியுள்ள 9.21 மில்லியன் கியூபிக் மீட்டர் மண்ணை, மூன்றாண்டுகள் எடுத்து விற்பதன் மூலம் ரூ.315.10 கோடி வருவாய் தோராயமாக கிடைக்கும். தேங்கியுள்ள மண்ணின் தன்மையை பொறுத்து, இந்த வருவாய் மதிப்பீடு மாறக்கூடும்.
வண்டல் மண்ணை அகற்றுவதற்கான அனுமதிபெறுவதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறுவதற்கான ஆவணங்களை தயாரிப்பது, அதற்கான ஆலோசனை கட்டணம், வரி உட்பட பல்வேறு செலவினங்களுக்காக ரூ.58.74 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வண்டல் மண்ணை அகற்றுவதற்கான 2023 - 24 கணக்கீட்டின் படி குறிப்பிட்ட இடைவெளியில் அப்பகுதி நிலத்தை அளவெடுப்பது, மண்ணை அகற்றுவதற்கான தொழிலாளர்களை நியமிப்பது, கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது, அணைப்பகுதியில் இதற்கான அலுவலகம் அமைப்பது, டெண்டர் விளம்பரத் தொகை, ஆவணப்படுத்துதல், தொழிலாளர் நலநிதி உட்பட கண்காணிப்பு செலவாக ரூ.1.81 கோடி திட்டமிடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை
பேச்சிப்பாறை அணையில் 2015 கணக்கீட்டின் படி 45.16 மில்லியன் கியூபிக் மீட்டர் வண்டல் படிந்துள்ளது. மூன்றாண்டுகளில் 4.231 மில்லியன் கியூபிக் மீட்டர் மண் அகற்றப்பட்டு அதில் 0.120 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். மீதியுள்ள மண்ணை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.140.36 கோடி வருவாய் தோராயமாக கிடைக்கும். இதற்கான ஆவணச் செலவு ரூ.1.10 கோடி, வேலை தொடங்கிய பின் கண்காணிப்பு செலவு ரூ.1.56 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமராவதி அணை
2012 ம் ஆண்டு கணக்கீட்டின் படி அமராவதி அணையில் 24.48 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு வண்டல் படிந்துள்ளது. முதல் மூன்றாண்டுகளில் 8.236 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு வண்டல் அள்ளப்பட்டு 7.936 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு விற்பனை செய்தால் ரூ.250.35 கோடி வருவாய் தோராயமாக கிடைக்கும். இதற்கான ஆவணச்செலவு ரூ.1.21 கோடி, கண்காணிப்பு செலவு ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் 142.74 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு வண்டல் படிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் நான்கு ஆண்டுகளுக்கு 13.75 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு அள்ளப்பட்டு விவசாயிகளுக்கு 0.437 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு இலவசமாக வழங்கப்படும். முதலாண்டில் 4 மில்லியன் கியூபிக் மீட்டரை விற்பதன் மூலம் தோராயமாக ரூ.112.76 கோடி வருவாய் கிடைக்கும். இதற்கான உத்தேச ஆவண செலவு ரூ.72.54 லட்சம், கண்காணிப்பு செலவு ரூ.3.85 கோடி திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு அணைகளையும் துார்வாருவதற்கான செலவு ரூ.15.55 கோடியாக திட்ட வடிவமைப்பு தலைமை பொறியாளரால் அனுப்பப்பட்டுள்ளது. வைகை, பேச்சிப்பாறை, அமராவதி, மேட்டூர் அணைகளை துார்வாருவதற்கான ஆவணச் செலவு, ஆலோசனை செலவுகளுக்காக முதற்கட்டமாக தமிழக அரசு ரூ.3 கோடியே 62 லட்சத்து 91ஆயிரம் ஒதுக்குகிறது.
களி மண், வண்டல் எவ்வளவு
அணையில் படிந்துள்ள வண்டல், களிமண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளுவதற்கும் மீதியுள்ளவற்றை ஒப்பந்ததாரர் மூலம் விற்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும். வைகை அணையில் 22 சதவீதம் களிமண், 56 சதவீதம் மணல், 22 சதவீதம் கிராவல் உள்ளது. பேச்சிப்பாறையில் 10.22 சதவீத களிமண், 51.67 சதவீத மணல், 38.11 சதவீத கிராவல், அமராவதியில் 47 சதவீத களிமண், 51 சதவீத மணல், 2 சதவீத கிராவல், மேட்டூரில் 60.39 சதவீத களி, 38.37 சதவீத மணல், 1.24 சதவீத கிராவல் இருப்பதாக ஒப்பந்ததாரர் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.
மதுரை, கோவை, திருச்சி தலைமை பொறியாளர்கள் மூலம் பிற நடவடிக்கைகளைத் தொடரவும், கனிமங்களை விற்பனை செய்யும் போது அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -