அழிவின் விளிம்பில் கழுதைப்புலிகள் கணக்கெடுப்புக்கு திட்டம் சமர்ப்பிப்பு
அழிவின் விளிம்பில் கழுதைப்புலிகள் கணக்கெடுப்புக்கு திட்டம் சமர்ப்பிப்பு
ADDED : ஜன 13, 2024 11:51 PM

கூடலுார்:நம் நாட்டின் அழிவின் பட்டியலில் உள்ள சில விலங்குகளில் கழுதைப்புலியும் உள்ளது. 'ஹைனா' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கழுதைப்புலி மாமிச உண்ணி ஆகும்.
இதன் கூர்மையான விழிகள், கோரைப்பற்கள், கருப்பு புள்ளிகள் கொண்ட தோல் காண்போரை அச்சப்பட வைக்கும்.
நம் மாநிலத்தில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி, சீகூர், தெங்குமரஹடா, சத்தியமங்கலம் அதை ஒட்டிய, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களின் ஒரு சில வனப்பகுதிகளில் காணப்படுகின்றன.
மசினகுடி வனப்பகுதிகளை வாழ்விடமாக கொண்டிருந்தாலும், இவை பகல் நேரங்களில் தென்படுவது அரிதாக உள்ளது. பெரும்பாலும் இரவில் மட்டுமே வெளியில் உலா வரும்.
இதுவரை கழுதைப்புலிகள் எண்ணிக்கை குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. மிகவும்குறைவாக உள்ள, இவற்றின் எண்ணிக்கை குறித்து சிறப்பு கணக்கெப்பு நடத்தி, பாதுகாக்க அரசு சிறப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டியது அவசியம்.
வனத்துறையினர் கூறுகையில், 'கழுதைப்புலிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசிடம் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
'கூடிய விரைவில் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்படும். வன ஊழியர்கள் சிலர், நேரடியாக பார்த்துள்ளனர். இதன் எச்சங்களை சேகரித்து வருகிறோம். தானியங்கி கேமராக்கள் மூலம் பதிவான பகுதிகளில் அதன் வாழ்விடங்களை கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

