பன்னீர்செல்வம் மீதான சொத்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தடை நீட்டிப்பு
பன்னீர்செல்வம் மீதான சொத்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தடை நீட்டிப்பு
ADDED : மார் 27, 2025 06:29 AM

அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கடந்த 2001- - 2006ம் ஆண்டு பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறை அமைச்சராகவும், சில மாதங்கள் முதல்வராகவும் பதவி வகித்தார் பன்னீர்செல்வம்.
அந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, அவருடைய இரு மகன்கள் ஆகியோருக்கு எதிராக, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், 2009ம் ஆண்டு விசாரணையை முடித்து, தேனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பின், சிவகங்கை நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், 2011ம் ஆண்டு அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தது. உடனே, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், குறிப்பிட்ட அந்த வழக்கை திரும்பப் பெற்றனர். வழக்கு வாபஸ் பெறப்பட்டு 11 ஆண்டுகள் கடந்த நிலையில், முடிந்து போன வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்; முடிந்து போன வழக்கிற்கு மீண்டும் உயிர் ஊட்டினார்; வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது; விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதிகள், 'இது போன்று சொத்து குவிப்பு தொடர்பான நிறைய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அனைவரும் வழக்கு விசாரணைக்கு தடை கோரியுள்ளனர். 'அனைத்து வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட்டு விசாரிக்க, வேறொரு அமர்வுக்கு வழக்கு மாற்றப்படும். அதுவரை, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது' என கூறி, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -