ADDED : செப் 23, 2024 02:07 AM

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனிடம் இருந்து, நான்கு கார்கள் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்டு நிதிநிறுவன தலைவராக இருந்த தொழில் வர்த்தகர் தேவநாதன், 62, மற்றும் அவரது கூட்டாளிகள், 525 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் ஓய்வுபெற்ற அதிகாரிகள், மூத்த குடிமக்கள் என 4,000த்திற்கும் மேற்பட்டோர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
டி.எஸ்.பி., அலெக்சாண்டர் தலைமையிலான போலீசார் விசாரித்து, தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
தேவநாதனை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, அவரிடம் இருந்து, 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது அவரை, மீண் டும் நான்கு நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். 'லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டேன்.
'நிதி நிறுவன பணத்தில் கோடிக்கணக்கான ரூபாயை எடுத்து, தேர்தலுக்கு செலவு செய்தேன்' என, வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அவரிடம் இருந்து நான்கு கார்கள் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேவநாதனின், ஐந்து வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.