' அமரன்' படத்திற்கு கண்டனம் கமலுக்கு எதிராக போராட்டம்
' அமரன்' படத்திற்கு கண்டனம் கமலுக்கு எதிராக போராட்டம்
ADDED : நவ 06, 2024 07:45 PM
சென்னை:'விஸ்வரூபம்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல, 'அமரன்' படத்தை தயாரித்த கமலை, 'டார்க்கெட்' செய்து, அவருக்கு எதிராக போராட, முஸ்லிம் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதால், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2013ல், நடிகர் கமல், 'விஸ்வரூபம்' என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தினர். பின், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, படம் வெளியிடப்பட்டது.
தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள 'அமரன்' படத்தை, கமல் தயாரித்துள்ளார். 'அப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து, கல்லா கட்டும், நல்லிணக்கத்தை கெடுக்கும் படத்தை தடை செய்ய வேண்டும்' என, எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இதேபோல், 'அமரன்' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.