அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கைது
அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கைது
ADDED : ஆக 26, 2025 06:46 AM

அரக்கோணம்; அமைச்சர் காந்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உட்பட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடந்த, 19, 20ல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது, 'பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கடந்த, 21ம் தேதி ராணிப்பேட்டை அடுத்த புதுப்பாடியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, 'ஏற்கனவே அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு சட்டசபையில் பதிலளித்து விட்டேன்.
'பைத்தியக்காரர் போல் பழனிசாமி பேசுகிறார். எத்தனை முறை சொன்னாலும், பழனிசாமிக்கு உண்மை புரியாது' என, பதில் அளித்தார்.
இந்த பேச்சுக்கு அமைச்சர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன், போலீஸ் தடையை மீறி, அ.தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
இதனால், அரக்கோணம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரவி உட்பட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.