கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து போராட்டம்: பா.ஜ.,வினர் கைது: அண்ணாமலை கண்டனம்
கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து போராட்டம்: பா.ஜ.,வினர் கைது: அண்ணாமலை கண்டனம்
UPDATED : ஜூன் 22, 2024 06:25 PM
ADDED : ஜூன் 22, 2024 06:17 PM

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 55 பேர் உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ஜ., குற்றம்சாட்டியது.
இந்நிலையில், கள்ளச்சாராய பலியை கண்டித்தும், தடுக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ., அறிவித்தது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்று( ஜூன் 22) பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி தெற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சித்ராங்கதன் தலைமையில் இன்று மாலை நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும், பா. ஜ., தொண்டர்களுக்கிடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அரண்மனை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் கைது செய்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுரையில் நடந்த போராட்டத்தின் போது பா.ஜ., போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசாருடன் பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடை கொண்டு வந்தனர். ஆனால், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறவில்லை எனக்கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கண்டனம்
பா.ஜ.,வினர் கைதுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளச்சாராயம் விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து, பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட நூற்றுக்கணக்கான பா.ஜ., சகோதர, சகோதரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் திமுகவினருக்கு உள்ள தொடர்பும், பொதுமக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ., சகோதர, சகோதரிகளை முடக்கப் பார்க்கிறது.இந்த அடக்குமுறைக்கு பா.ஜ., அஞ்சப் போவதில்லை. பிற மாவட்டங்களிலும், இன்று கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.