ADDED : அக் 12, 2024 03:54 AM

துாத்துக்குடி : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான வேட்டையன் திரைப்படத்தில், ஒரு காட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியை ஒருவரை செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து வெளியிட்டதாக இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக, 'டிவி' செய்தியில், கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி மாணவர்கள் அந்த சம்பவத்தில் ஈடுபட்டது போன்ற தெரிவிக்கப்படும்.
அந்த காட்சிகளை பார்த்த கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவில்பட்டி காந்திநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. அங்கு பயிலும் மாணவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சி இடம்பெற்றிருப்பதாக பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ராஜேஷ்கண்ணா தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று திடீரென வேட்டையன் படம் திரையிடப்பட்டுள்ள லட்சுமி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்திநகர் அரசுப் பள்ளியை தவறாக சித்தரித்த காட்சியை நீக்கிவிட்டு திரைப்படத்தை ஒளிபரப்ப வேண்டும், இல்லையென்றால் திரைப்படத்தை ஒளிபரப்ப விடமாட்டோம் என அவர்கள் கோஷமிட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய போலீசார், காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

