ஓய்வூதியர் குழுவின் இடைக்கால அறிக்கையால் போராட்ட முடிவு: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கங்கள் ஆவேசம்
ஓய்வூதியர் குழுவின் இடைக்கால அறிக்கையால் போராட்ட முடிவு: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கங்கள் ஆவேசம்
ADDED : அக் 03, 2025 01:46 AM

மதுரை: 'ஓய்வூதிய அலுவலர் குழு ஓய்வூதிய திட்டம் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்யாததால், அரசு ஊழியர், ஆசிரியர்களை போராட்டத்திற்கு அரசு தள்ளுகிறது' என, சி.பி.எஸ்., ஒழிப்பு சங்கங்கள் ஆவேசமடைந்துள்ளன.
மதுரையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜ ராஜேஸ்வரன், பிரெடெரிக் ஏங்கல்ஸ், செல்வகுமார் கூறியதாவது:
தி.மு.க., 2021 தேர்தல் காலத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது. நான்கரை ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலுவலர் குழு நியமனம் என்ற பெயரில் இழுத்தடிப்பு செய்தது. கடந்த சட்டசபை தொடரில் செப்.,30ல் குழுவிடம் அறிக்கை பெறப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அரசு நியமித்த அலுவலர் குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்பை தெரிவித்தோம். அக்குழு ஆறுமாதங்களாக வெறும் தகவல்களை மட்டுமே திரட்டி வருவதாக தகவல் பெற்றோம். உடனே அரசு அனைத்து சங்கங்களிடமும் கருத்து கேட்கிறோம் என அழைப்பு கடிதம் அனுப்பியது. இவ்வாறு கண்துடைப்பு வேலைகளை மட்டுமே செய்கின்றனர். இரு மாதங்கள் காலநீட்டிப்பு கேட்கும் அரசு அதனை பரிசீலிக்க 2 மாதங்கள் எடுத்துக் கொள்ளும். அதற்குள் தேர்தல் அறிவிப்பு வந்து விடும். எனவே இதுமுழுக்க முழுக்க ஏமாற்றுவேலை.
உண்மையான அக்கறை இருந்தால் பழைய திட்டத்தை அமல்படுத்திய ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்திருக்கலாம். அரசாணை வெளியிடாமல், அலுவலர் குழு காலஅவகாசம் நீட்டிப்பை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்காக அக்., 6 முதல் 15 வரை ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம், அக்., 15 ல் சென்னையில் மறியல், அக்., 16 ல் மாநிலம் முழுவதும் மறியல் என காலவரையற்ற போராட்டத்திற்கு முன்தயாரிப்பாக நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதிய திட்டமீட்பு இயக்கம், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க அமைப்புகள் போராடின. பிப்ரவரியில் அரசு கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைத்தது. அது காலம் கடத்தும் செயல். நம்பி வாக்களித்த அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்றும் செயல். குழுவை கலைக்க வலியுறுத்தினோம்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அக்குழு செப்டம்பர் இறுதிக்குள் முழு அறிக்கையை அளிக்கும் என தெரிவித்தனர். ஆனால் ஆக., 31 முதல் செப்., 12 வரை அனைத்து சங்க நிர்வாகிகளுடன் ஓய்வூதிய குழு கருத்துக்களை கேட்டு பெற்றது. செப்., 30ல் ஓய்வூதியக்குழு தன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. முழு அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசின் நிறுவனங்கள், இந்திய ஆயுள்காப்பீட்டு கழகத்துடன் ஆலோசனை செய்ய அவகாசம் வேண்டும் எனத்தெரிவித்துள்ளது.
இது அரசு ஊழியர், ஆசிரியர்களை கொதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. குழுவின் காலநீட்டிப்பு, காலம் கடத்தும் செயலே அன்றி வேறில்லை. ஓய்வூதியக் குழுவை கலைத்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய குழுவும், தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் அரசு ஊழியர், ஆசிரியர்களை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தள்ளுகின்றனர் என்றார்.