போராட்டம் என்பது பேஷனாகி விட்டது: அமைச்சர் பேச்சுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., கண்டனம்
போராட்டம் என்பது பேஷனாகி விட்டது: அமைச்சர் பேச்சுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., கண்டனம்
ADDED : ஜன 30, 2026 01:47 AM

சென்னை: ''தி.மு.க., அரசு, சட்டசபை தேர்தலை சந்திக்க இருப்பதால், அரசை எதிர்த்து தினசரி போராட்டம் நடத்துவது பேஷனாகி விட்டது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூர், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 1,627 கல்லுாரி மாணவ - மாணவியருக்கு மடிக்கணினிகளை, அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., பழனிசாமி ஆட்சியில் தினசரி 100 குற்றச் சம்பவங்கள் நடந்தன. அந்த சம்பவங்களை தொகுத்தால், தினசரி 100 புத்தகங்கள் போடலாம். தி.மு. க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது.
தனிமனித விரோதத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களில், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை நந்தனம் அரசு கலை கல்லுாரி மாணவிக்கு நடந்ததாக சொல்லப்படும் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, எனக்கு எந்த தகவலும் தெரியாது; தெரிந்த பின் கருத்து தெரிவிக்கிறேன்.
தி.மு.க., அரசு தேர்தலை சந்திக்க இருப்பதால், தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவது, 'பேஷன்' ஆகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரின் இந்த கருத்தை, அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், 'ஆணவப் பேச்சு' என விமர்சித்துள்ளன.
அதன் விபரம்:
பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
சென்னை நந்தனம் அரசு கலை கல்லுாரி வளாகத்தில் உள்ள உணவகத்தில், பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, அக்கல்லுாரி வளாகத்திலேயே, உணவக மாஸ்டர் உள்ளிட்ட பலர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தமிழகத்தில் கொடூரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம், பீஹாரைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவரும், கணவர், குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இது குறித்தெல்லாம் கேட்டால், 'அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகிறார். அமைச்சரின் அக்கறையற்ற பேச்சு வேதனை அளிக்கிறது; கடும் கண்டனத்திற்குஉரியது.
அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்
'அரசு துறைகளில், 10 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்வோம்' என்று, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
இதை நிறைவேற்றக் கோரிய மருத்துவ துறை ஒப்பந்த ஊழியர்களை, 'தேர்தல் நேரத்தில் போராடுவது பேஷன் ஆகி விட்டது' என்று கொச்சைப்படுத்தி இருக்கிறார், அமைச்சர் சுப்பிரமணியன்.
கொரோனா பெருந்தொற்று காலங்களிலும், தங்கள் உயிரை குறித்து கவலைப்படாமல், மக்களுக்காக உழைத்த மருத்துவ துறை ஊழியர்களை, அவர் அவமானப்படுத்திஉள்ளார்.
எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில், அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றினர். இன்று வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் மக்களை அவமானப்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

