sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ சென்னையில் தொடரும் போராட்டங்கள்

 சென்னையில் தொடரும் போராட்டங்கள்

 சென்னையில் தொடரும் போராட்டங்கள்


ADDED : பிப் 10, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில், ஊராட்சி செயலர்களை இணைக்க வேண்டும்; மாத ஓய்வூதியம், 15,000 வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5ம் தேதி முதல், சென்னையில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஐந்தாம் நாளாக நேற்று, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில், 2,000க்கும் அதிகமானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்; மாலையில் விடுவித்தனர்.

ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள்


ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், கடந்த 2ம் தேதி முதல், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

எட்டாம் நாளான நேற்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள இயக்க அலுவலகத்தில், 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்


'டெட்' தேர்வு மதிப்பெண் குறைப்பு உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறாம் நாளாக நேற்று, சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை, போலீசார் கைது செய்தனர்.

பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகம் அருகே நேற்று, சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை, போலீசார் கைது செய்தனர்; மாலையில் விடுவித்தனர்.

இதனால், கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் சிரமப்பட்டனர்.

மின் வாரிய ஊழியர்கள்


தமிழக மின் வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலை பின்புறம், கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, சங்க நிர்வாகிகள், மின் வாரிய உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்த வந்தனர்.

பின், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒப்பந்த ஊழியர்கள், மாலை மெரினா கடலில் இறங்கி, போராட்டம் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

சத்துணவு ஊழியர்கள்


தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் நேற்று ஆறாம் நாளாக, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, தரமணியில் உள்ள, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகம் முன் நடந்த, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, 1,200 ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலை விடுவித்தனர்.

மது கடைகளை திறக்க மறுத்து போராட்டம்


டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரம் செய்வது, காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழுவினர், கடந்த, 1ம் தேதி முதல் சென்னை எழும்பூரில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக, 'நேற்று மதியம், 12:00 மணி முதல் மூன்று மணி நேரம் மது கடைகளை திறக்காமல் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்' என, போராட்ட குழுவினர் முன்கூட்டியே அறிவித்திருந்தனர். அதன்படி, மாநிலம் முழுதும் நேற்று மதியம், 12:00 மணிக்கு, 1,300 கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கடைகள் திறக்கப்படவில்லை. அதேசமயம், சென்னை உட்பட பல இடங்களில் மது வகைகளை வாங்க, டாஸ்மாக் கடைகள் முன், மது பிரியர்கள் குவிந்தனர். ஆனால், கடைகள் திறக்கப்படாததால், குழப்பம் அடைந்தனர். அங்கிருந்த பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள், அதிகாரிகள் பேச்சு நடத்தி, கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் நேற்றும் எழும்பூரில் போராட்ட குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்தனர்.



என்.எச்.எம்., பணியாளர்கள் போராட்டம் வாபஸ் தமிழ்நாடு என்.எச்.எம்., பணியாளர்கள், ஊதிய உயர்வு, மருத்துவ மற்றும் மகப்பேறு விடுப்பு உட்பட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், போராட்ட குழுவினருடன் பேச்சு நடத்தினார். அதில், உடன்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, என்.எச்.எம்., பணியாளர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us