விண்ணில் பாய்ந்தது 'பி.எஸ்.எல்.வி., - சி 58' ராக்கெட் ; வான்வெளியின் செயல்பாட்டை ஆய்வு செய்யும்
விண்ணில் பாய்ந்தது 'பி.எஸ்.எல்.வி., - சி 58' ராக்கெட் ; வான்வெளியின் செயல்பாட்டை ஆய்வு செய்யும்
UPDATED : ஜன 01, 2024 09:12 AM
ADDED : ஜன 01, 2024 03:19 AM

சென்னை : 'பி.எஸ்.எல்.வி., - சி 58' ராக்கெட் வாயிலாக, 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' நிறுவனம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இங்குள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி 58 ராக்கெட் வாயிலாக, 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள், இன்று காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்போசாட் செயற்கைக்கோளில், 'எக்ஸ்ஸ்பெக்ட், பொலிக்ஸ்' போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. மொத்தம், 469 கிலோ எடை உடைய செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 650 கி.மீ., தொலைவில் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும்.
இந்த செயற்கைக்கோள், வானியலின் இயக்கம், விண்வெளியில் காணப்படும் நிறமாலை, துாசு, செயலில் உள்ள விண்மீன் கருக்கள், மேகக்கூட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இந்தாண்டு முதலாவதாக ஏவப்படும், பி.எஸ்.எல்.வி., - சி 58 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில் 60வது ராக்கெட். இதன் உயரம் 44.4 மீட்டர். இந்த ராக்கெட், எரிபொருள், செயற்கைக் கோள் என, மொத்தம் 260 டன் எடை கொண்டது.