மனுதாரருக்கு தாமதமாக தகவல் வழங்கிய பி.டி.ஓ., இழப்பீடு தர உத்தரவு
மனுதாரருக்கு தாமதமாக தகவல் வழங்கிய பி.டி.ஓ., இழப்பீடு தர உத்தரவு
ADDED : நவ 15, 2025 11:48 PM
சென்னை: 'தாமதமாக தகவல் வழங்கிய, பொது தகவல் அலுவலரான, பி.டி.ஓ., எனப்படும், வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும்' என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா நல்லாம்பள்ளியை சேர்ந்தவர் முத்துமணி.
இவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2023 ஆகஸ்டில், கோவை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பொது தகவல் அலுவலராக பணிபுரியும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினார்.
அதில், கோவை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் கண்காணிப்பில் உள்ள அரசு அலுவலகங்களில், 2017 முதல், தற்போது வரை வெளிப்படையான நிர்வாகத்திற்காக, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட பல தகவல்களை கேட்டிருந்தார். அதற்கு உரிய காலத்தில் அவருக்கு பதில் தரப்படவில்லை. எனவே, மாநில தகவல் ஆணையத்தில், முத்துமணி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கடந்த மாதம், 31ம் தேதி தகவல் வழங்கப்பட்டு உள்ளது. இது, மிகவும் கால தாமதமானது.
எனவே, பொது தகவல் அலுவலர், மனுதாரருக்கு, 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்கப்பட்டதற்கான ஆவணத்தை டிசம்பர், 18ல் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

