குழந்தைகள், ஆண்களை பாதிக்கும் ஜி.பி.எஸ்., நோயை தடுக்க நடவடிக்கை பொது சுகாதார துறை அறிவுறுத்தல்
குழந்தைகள், ஆண்களை பாதிக்கும் ஜி.பி.எஸ்., நோயை தடுக்க நடவடிக்கை பொது சுகாதார துறை அறிவுறுத்தல்
ADDED : பிப் 20, 2025 12:17 AM
சென்னை:'கிலன் பார் சிண்ட்ரோம்' என்ற ஜி.பி.எஸ்., தொற்று, குழந்தைகள், எதிர்ப்பாற்றல் குறைந்த ஆண்களை அதிகம் பாதிக்கும் என்பதால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
ஜி.பி.எஸ்., பாதிப்பு ஏற்பட்டால் துவக்கத்தில் லேசான வலியும், மந்தமான உணர்வும் ஏற்படலாம். நாளடைவில் தசைகள் தளர்ந்து நடக்க முடியாமலும், கைகளை அசைக்க இயலாமலும் பக்கவாத நிலை உருவாகக் கூடும்.
கொதிக்க வைத்த நீர்
ஜி.பி.எஸ்., நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாக இருந்தாலும், 'கேம்பைலோபாக்டர் ஜேஜுனி' என்ற பாக்டீரியா தான் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த வகை பாக்டீரியா, முறையாக சமைக்கப்படாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத நீர் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே, தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
அதேபோல், இறைச்சியை உயர் கொதிநிலையில் வேக வைப்பது அவசியம். அடிக்கடி கைகளை கழுவுவதையும், அசைவ உணவுகள் சூடாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்நோய், குழந்தைகள், எதிர்ப்பாற்றல் குறைந்த ஆண்கள், முதியவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சுவாச செயலிழப்பு
அவர்களுக்கு எதிர்ப்பாற்றால் எதிர்வினை ஏற்பட்டு, நரம்புகளின் வெளிப்புறத்தை கிருமிகள் தாக்கும். அப்போது, வாதநோய் ஏற்படும். மூச்சு விடுவதற்கு தேவையான தசைகளும் தளர்ச்சி அடைவதால், சுவாச செயலிழப்பு ஏற்படும்.
அத்தகைய நிலையை அடைவோருக்கு தீவிர சிகிச்சையும், 'இம்யூனோகுளோபுலின்' மருந்துகள் அவசியம்; மற்றவர்கள் அச்சப்பட தேவையில்லை. இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பை வலுப்படுத்தி, அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல் முக்கியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.