பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்; மாமல்லபுரம், செங்கல்பட்டில் இடம் தேர்வு
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்; மாமல்லபுரம், செங்கல்பட்டில் இடம் தேர்வு
ADDED : ஜன 14, 2026 03:43 AM

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, வரும் 23ம் தேதி சென்னையில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக, செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் புதிய கட்சிகளை சேர்த்து, ட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பா.ஜ., மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களை உற்சாகப்படுத்த, பிரதமர் மோடி, வரும் 23ம் தேதி சென்னை வருகிறார்.
அவர், பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் மேடை ஏற உள்ளனர்.
பொதுக்கூட்டம் நடத்த, மாமல்லபுரம் அருகே இரண்டு இடங்களும், செங்கல்பட்டில் ஒரு இடமும், பா.ஜ., நிர்வாகிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து ஓரிடம் தேர்வு செய்யப்படும் என பா.ஜ.,வினர் கூறினர்.

