பொது கூட்டங்கள், 'ரோடு ஷோ' வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு
பொது கூட்டங்கள், 'ரோடு ஷோ' வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு
ADDED : ஜன 07, 2026 07:32 AM

சென்னை: கரூரில், கடந்த ஆண்டு செப்., 27ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர்.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு, வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க கோரி, த.வெ.க., அ.தி.மு.க., தேசிய மக்கள் சக்தி கட்சிகள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன.
இவற்றை விசாரித்த, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40க்கும் மேற்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களை பெற்று, பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்து, தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக, அரசியல் கட்சிகள் அளித்த ஆலோசனைகளை பரிசீலித்து, ஜனவரி 5ம் தேதிக்குள், வழிகாட்டு விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கி, அதற்கான அரசாணையை, தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார்.
வழிகாட்டு விதிமுறைகள் அறிவிக்காதது, நீதிமன்ற அவமதிப்பு செயல் என, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் சூரியபிரகாசம், தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

