பொது சேவை பிரிவு கட்டணம்: மின் வாரியத்திற்கு கிடைத்தது ரூ.2,705 கோடி வருவாய்
பொது சேவை பிரிவு கட்டணம்: மின் வாரியத்திற்கு கிடைத்தது ரூ.2,705 கோடி வருவாய்
ADDED : டிச 16, 2025 05:26 AM

சென்னை : தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், 'லிப்ட், மோட்டார் பம்ப்' போன்றவற்றை உள்ளடக்கிய, பொது சேவை பிரிவுக்கான மின் கட்டணம் வாயிலாக, 2024 - 25ல் மின் வாரியத்திற்கு, 2,705 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.
கடந்த, 2022 செப்., 10ல் மின் கட்டணத்தை உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆணை பிறப்பித்தபோது, முதல் முறையாக, பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில், 'ஒன் டி' என்ற புதிய மின் கட்டண விகிதத்தை அமல் படுத்தியது.
அந்த பிரிவில் உள்ள லிப்ட், மோட்டார் பம்ப், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பொது சேவை பிரிவுக்கு யூனிட், 8 ரூபாயாகவும், மாத நிரந்தர கட்டணம் கிலோ வாட்டிற்கு, 100 ரூபாயும் நிர்ணயிக்கப் பட்டது.
தொடர்ந்து, மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை பிரிவு மின் கட்டணம் யூனிட், 8.80 ரூபாயாகவும், கிலோ வாட்டிற்கு நிரந்தர கட்டணம், 110 ரூபாயாகவும் உள்ளது.
கடந்த, 2024 - 25ல் நுகர்வோரிடம் இருந்து மொத்த மின் கட்டணம் வாயிலாக, 68,103 கோடி ரூபாய் வசூலா கியுள்ளது. இதில் வீடுகள், கைத்தறி, முதியோர் இல்லங்கள் வாயிலாக கிடைத்த வருவாய், 10,670 கோடி ரூபாயாக உள்ளது.
பொது சேவை பிரிவு வாயிலாக கிடைத்த வருவாய், 2,705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2023 - 24ல், 2,484 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. பொது சேவை கட்டணம் அதிகரித்ததற்கு, மின் கட்டணம் உயர்வு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவை முக்கிய காரணம்.

