கட்டுமான பொருள் விலைப்பட்டியல் பொதுப்பணித்துறை வெளியீடு
கட்டுமான பொருள் விலைப்பட்டியல் பொதுப்பணித்துறை வெளியீடு
UPDATED : நவ 13, 2026 09:00 PM
ADDED : நவ 13, 2026 08:57 PM
சென்னை: தமிழகத்தில், அரசு துறைகள் ‘டெண்டர்’ கோருவதற்கு, கடைபிடிக்க வேண்டிய கட்டுமானப் பொருட்கள் விலைப் பட்டியலை, பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு துறைகள், பொதுத்துறைகள் வாயிலாக, சாலை அமைப்பது, பாலம் கட்டுவது, அரசு துறைகளுக்கான அலுவலகங்கள் கட்டுவது, போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பணிகளுக்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதற்கு, ‘டெண்டர்கள்’ கோரப்படுகின்றன. இதற்கு தேவையான, கட்டுமானப் பொருட்களுக்கு ஒரு விலைப்பட்டியல் தயாரித்து, ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2026 – 27 நிதி ஆண்டுக்கான விலைப்பட்டியல் வெளியிடப்படவில்லை.
புதிய விலைப்பட்டியல் வெளியிடப்படும் வரை, பழைய விலைப்பட்டியலை கடைபிடிக்கலாம் என பொதுப்பணித்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் 2026 – 27 நிதி ஆண்டுக்கான, புதிய விலைப்பட்டியலை, பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
அதில், ஒரு டன் சிமென்ட், 5,000 ரூபாய்; ஒரு டன் கம்பி, 55,665 ரூபாய்; 1,000 செங்கல், 7,887 ரூபாய்; ஒரு கன மீட்டர் ‘எம் சாண்ட்’, 1,578 ரூபாய் என விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேபோல் பணி அடிப்படையிலும், பணியாளர் கூலி அடிப்படையிலும், விலை விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள, புதிய விலைப்பட்டியல், நேற்று முதல் அமலுக்கு வந்தது.
