புதுச்சேரி பா.ஜ.,வில் உச்ச கட்ட குழப்பம்: மேலிட பார்வையாளர்கள் பஞ்சாயத்து
புதுச்சேரி பா.ஜ.,வில் உச்ச கட்ட குழப்பம்: மேலிட பார்வையாளர்கள் பஞ்சாயத்து
ADDED : ஜன 05, 2025 01:47 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., உச்சக்கட்ட குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், மேலிட பார்வையாளர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வைச் சேர்ந்த செல்வம் சபாநாயகராக உள்ளார். இதுமட்டுமின்றி பா.ஜ., வைச் சேர்ந்த நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் அமைச்சராக உள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வியைத் தழுவியது. இந்த தோல்விக்குப் பின் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
குற்றச்சாட்டு
லோக்சபா தேர்தல் தோல்விக்கு முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்களின் அணுகுமுறை தான் காரணம் என அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
'இப்படியே போனால் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வியைத்தான் தழுவும்' எனவும் போர்க்கொடி உயர்த்தினர். அதனால், என்.ஆர்.காங்., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையெனில், பா.ஜ., அமைச்சர்களை மாற்றி, சுழற்சி முறையில் மற்றவர்களையும் அமைச்சர்களாக வேண்டும் என்றும் கட்சி மேலிடத்திடம் முறையிட்டனர்.
இந்நிலையில், அதிருப்தியில் உள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் லாட்டரி அதிபர் மகன் பின்னால் அணிவகுத்து, புதுச்சேரி பொதுமக்களுக்கு மழை நிவாரணம் வழங்கினர்.
புதுச்சேரி அரசினை கடுமையாக விமர்சித்த கூட்டத்திலும் கலந்து கொண்டனர். இது என்.ஆர்.காங்கிரசார் மத்தியில் கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிருப்தி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பங்கிற்கு அடுத்த குண்டை வீசினர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த சபாநாயகர் செல்வம் மீது, சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு மட்டுமின்றி, பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோர் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர சட்டசபை செயலரிடம் மனு அளித்தனர். இதனால், பா.ஜ.,விலும் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது.
மேலிட உத்தரவு
இதற்கிடையில், புதுச்சேரி பா.ஜ.,வில் நிலவும் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர, பா.ஜ., மேலிடம் கட்சியினருக்கு உத்தரவிட்டது.
அதையொட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தனர்.
அவர்களை, முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி குழப்பம், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் நடவடிக்கை குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதை சரி செய்யாவிட்டால், தான் கடுமையான முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பா.ஜ., மேலிடத்தால் அனுப்பட்ட இருவரும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியே அழைத்து, கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தை பா.ஜ., ஆதரவு சுயேச்சைகள் அங்காளன், சிவசங்கர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தனர். சுழற்சி முறையில் அமைச்சர் பதவியை வலியுறுத்தினர். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
இதையெல்லாம் மேலிடம் அனுப்பிய சமரசப் பேச்சாளர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
'பா.ஜ., சட்டசபை தேர்தலுக்குத் தயாராகும் வகையில், பா.ஜ., அமைச்சர்களை மாற்றம் செய்ய வேண்டும்' என சமரசக் கூட்டத்திலும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால், பா.ஜ., அமைச்சர்களில் மாற்றம் வருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.