ரேஷன் கடைகளில் காய்கறி முன்னோடியாக திகழ்ந்த புதுகை சமஸ்தானம்
ரேஷன் கடைகளில் காய்கறி முன்னோடியாக திகழ்ந்த புதுகை சமஸ்தானம்
UPDATED : நவ 22, 2026 07:02 PM
ADDED : நவ 22, 2026 06:57 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த போது, 1946ம் ஆண்டில், பொதுமக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
இரண்டாம் உலகப்போர் காரணமாக, 1939– 1945ம் ஆண்டு காலக்கட்டத்தில், இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. போர் முடிந்த பிறகும் அந்த நிலை மாறவில்லை.
கடந்த 1945– 46-ல், புதுக்கோட்டையில் நிலவிய கடும் உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமாக, ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை சமாளிக்க சமஸ்தான நிர்வாகம் சார்பில், ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக, புதுக்கோட்டை சமஸ்தான சட்டசபையில், 1946ல் உணவு பொருட்கள் வினியோக சட்டம் கொண்டு வரப்பட்டது. நகர்ப்புறம் மற்றும் கிராம புறங்களிலும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு, அட்டைகளும் வழங்கப்பட்டன. அந்த கடைகளில், பொதுமக்களுக்கு தேவையான அரிசி, கேழ்வரகு, சோளம், சர்க்கரை, துணி, கிழங்கு வகைகள், காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டன.
வியாபாரிகள், விறகுகளை பதுக்குவதாக புகார் எழுந்த போது, விறகுகளும் ரேஷன் கடை மூலம் வினியோகம் செய்யப்பட்டன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களில், அவர்கள் குடும்பத்துக்கு தேவையானது போக, மீதமுள்ள அனைத்தும், ரேஷன் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக விவசாயிகளுக்கு வரிச்சலுகை மானியமாக அளிக்கப்பட்டது.
விவசாயிகள், வியாபாரிகளுக்கு விளைபொருளை நேரடியாக விற்பனை செய்ய, சமஸ்தான நிர்வாகம் தடை விதித்தது. ரேஷன் கடை மட்டுமின்றி தனியார் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்களுக்கு விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
