பஞ்சாப் ஓய்வு ராணுவ மேஜர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: 13 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சி
பஞ்சாப் ஓய்வு ராணுவ மேஜர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: 13 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சி
ADDED : செப் 29, 2024 01:21 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வடக்கு விஜயநாராயணத்தில் ஐ.என்.எஸ்., கட்டபொம்மன் கடற்படை தளம் உள்ளது. சில தினங்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றித் திரிவதும், கடற்படை வளாக முகப்பை பார்ப்பதுமாக இருந்தார்.
ஊழியர்கள் விசாரித்தனர். அவர் ராணுவத்தில் பணியாற்றியவர் போல மிடுக்காக இருந்தார். தாடி வைத்திருந்தார். நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
ஏ.எஸ்.பி., பிரசன்னகுமார், அவரிடம் பேசியபோது, அவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும், ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர் என்பதையும் அறிந்தார். பின்னர், நாங்குநேரியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.
திருநெல்வேலி, மத்திய உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிசெல்வம், இதுகுறித்து பஞ்சாப் போலீசுக்கு தெரிவித்தார்.
பஞ்சாப், பதான்கோட் போலீஸ் ஸ்டேஷனில் கந்தர்வ் சிங், 73, என்ற ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் காணாமல் போனது குறித்து புகார் இருந்தது. அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கந்தர்வ் சிங்கின் மகன்கள் சுனில் சிங், அனில் சிங்ஆகியோர் விமானத்தில் தந்தையை தேடி திருநெல்வேலி வந்தனர். தந்தையை பார்த்து ஆரத் தழுவினர்.
ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய கந்தர்வ் சிங்கின் முதல் மனைவி இறந்து விட்டதால், இரண்டாவதாக திருமணம்செய்து கொண்டார். அப்பெண்ணின் கொடுமையால், மகன்களும், கந்தர்வ் சிங்கும் பாதிக்கப்பட்டனர்.
அவர், 2011 ஜூன் 6ல் காணாமல் போனார். அவர் எப்படி திருநெல்வேலி வந்தார் என்பது தெரியவில்லை. கடற்படைதளம் அருகில் அடிக்கடி நிற்பதும், வேடிக்கை பார்ப்பதுமாக இருந்ததால் அதன் வாயிலாக அவர் யாரென கண்டறியப்பட்டுள்ளார்.
அவரது மகன்கள், மகிழ்ச்சியுடன் தந்தையைசொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை குடும்பத்தினரிடம் சேர்ப்பதற்கு முயற்சி எடுத்த ஏ.எஸ்.பி., பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் நாககுமாரி, மத்திய உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிசெல்வம் ஆகியோரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.