சட்டத்துக்கு உட்பட்டு தொழில் செய்வோம் கல்குவாரி உரிமையாளர்கள் உறுதிமொழி
சட்டத்துக்கு உட்பட்டு தொழில் செய்வோம் கல்குவாரி உரிமையாளர்கள் உறுதிமொழி
ADDED : செப் 26, 2025 02:47 AM
'சட்டத்துக்கு உட்பட்டு தொழில் செய்வோம்; அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் குவாரியை பயன்படுத்த மாட்டோம்' என, கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழ்நாடு கல்குவாரி, கிரெஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், கோவை சின்னியம்பாளையத்தில் நேற்று நடந்தது.
சங்கத்தின் மாநில தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக கல் குவாரி அமைக்க இடம் இல்லை. உடைத்த கல் குவாரிகளை வரைமுறைப்படுத்த வேண்டும். கல் வெட்டி எடுக்கப்பட்ட கால அளவில் மட்டும் உரிய தொகையை வசூலித்து மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும். பொது மன்னிப்பு அடிப்படையில் குறைந்த அபராதம் மட்டும் விதிக்க வேண்டும்.
தமிழக அரசு, 2025 ஏப்ரலில் பிறப்பித்த அரசாணை படி, 5 ஹெக்டேருக்கு குறைவான குவாரிகளுக்கு 15 ஆண்டுகள், 10 ஹெக்டேர் வரை 20 ஆண்டுகள், 10 ஹெக்டேருக்கு மேல், 30 ஆண்டுகள் வரை குத்தகை நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஆனால், 99 சதவீத குவாரிகள் 5 ஹெக்டேருக்கும் குறைவாகவே உள்ளது. இதை கனிம வள இருப்புக்கு தகுந்தாற்போல், 30 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.
தற்போதுள்ள, 'டிரான்சிட் பாஸ், இ-பெர்மிட்' முறைகளில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வாகனத்தில் ஏற்றப்படும் அளவுக்கு மட்டுமே 'டிரான்சிட்' ரசீது வழங்க வேண்டும். எடைக்கு எடை மட்டுமே இதை கணக்கீடு செய்ய வேண்டும்; பொருளின் தன்மையை கணக்கீடு செய்யக்கூடாது.
கனிமத்துக்கு ஜி.எஸ்.டி., பில்லில் எச்.எஸ்.என்., கோடு குறிப்பிட்டு, 'டிரான்சிட் பாஸ்' எண்ணையும் இணைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கனிம வள திருட்டை முற்றிலும் தடுக்க முடியும்.
'சமாதான்' திட்டத்தில் குறைவான அபராதம் மட்டுமே விதித்து, மீண்டும் கல் குவாரி வளர்ச்சிக்கு அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பின், 'சட்டத்துக்கு உட்பட்டு தொழில் செய்வோம்; அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் குவாரிகளை பயன்படுத்த மாட்டோம். முறைகேடான வகையில் செயல்படுவதை தவிர்ப்போம்; ஒற்றுமையுடன் செயல்படுவோம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கூட்டத்தில், மாநில செயலர் முத்துகோவிந்தன், பொருளாளர் பாலசுப்ரமணியன், கோவை மாவட்ட தலைவர் சந்திரபிரகாஷ், செயலாளர் நந்தக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நமது நிருபர் -