8 மாதமாக லைசென்ஸ் இல்லாமல் நடந்த குவாரி; 6 பேர் உயிர் பறி போன சம்பவ விசாரணையில் அதிர்ச்சி
8 மாதமாக லைசென்ஸ் இல்லாமல் நடந்த குவாரி; 6 பேர் உயிர் பறி போன சம்பவ விசாரணையில் அதிர்ச்சி
ADDED : மே 27, 2025 04:35 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை மேகா புளூமெட்டல்ஸ் குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணையில் அந்த குவாரிக்கான அனுமதி 8 மாதங்களுக்கு முன்பே காலாவதியான நிலையில் அருகில் உள்ள மற்றொரு குவாரி அனுமதியை வைத்து இதையும் இயக்கியது தெரியவந்துள்ளது.
மல்லாக்கோட்டையில் மேகவர்மனுக்கு சொந்தமான மேகா புளூ மெட்டல் குவாரியில் மே 20 ம் தேதி காலை 9:45 மணிக்கு வெடி வைக்க பாறையை குடைந்தபோது, 100 டன் எடையுள்ள பாறை சரிந்ததில், பொக்லைன் டிரைவர் ஓடிசா மாநிலம் ஹர்ஜித் 28, ஓடைப்பட்டி முத்தையா மகன் முருகானந்தம் 49, மதுரை மாவட்டம், இ.மலம்பட்டி மூக்கன் மகன் ஆறுமுகம் 50, மலையாண்டி மகன் ஆண்டிச்சாமி 50, குழிச்சிவல்பட்டி சின்னையா மகன் கணேசன் 43, துாத்துக்குடி எட்டையபுரம் கருப்பையா மகன் மைக்கேல்ராஜ் 43 ஆகிய 6 பேர் பலியாகினர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு, அமைச்சர், மேகா புளூமெட்டல் குவாரி சார்பில் தலா ரூ.10.50 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது.
'ட்ரோன்' மூலம் ஆய்வு
சிவகங்கை கனிமவளத்துறை துணை இயக்குனர் விஜயராகவன் தலைமையில் மல்லாக்கோட்டை, செவ்வூர் ஆகிய 4 இடங்களில் உள்ள குவாரிகளை ட்ரோன்' மூலம் ஆய்வு செய்தனர். மல்லாக்கோட்டையில் மேகா புளூமெட்டல்ஸ் பெயரில் 3.6 எக்டேரிலும், 1.31 எக்டேரிலும் இரு இடங்களில் குவாரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதில் சம்பவம் நடந்த 3.6 எக்டேர் குவாரிக்கான லைசென்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே முடிந்துவிட்டது. 1.31 எக்டேர் குவாரிக்கான லைசென்ஸ் 2029ம் ஆண்டு வரை உள்ளது. இந்த லைசென்சையும் ரத்து செய்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
ட்ரோன்' மூலம் மல்லாக்கோட்டை, செவ்வூர் ஆகிய 4 குவாரிகளிலும் ஆய்வு செய்துள்ளனர். முதற் கட்ட விசாரணையில் 3.60 எக்டேரில் குவாரி நடத்த லைசென்ஸ் பெற்ற இடத்தில் 157 அடி ஆழத்திற்கு மட்டுமே பாறைகளை தோண்டி எடுக்க அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் 400 அடி ஆழத்திற்கு மேல் பாறைகளை தோண்டி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
துணை இயக்குனர் விஜயராகவன் கூறும்போது, மாவட்டத்தில் 4 குவாரிகள் உள்ளன. அனைத்திலும் ஆய்வு செய்துள்ளோம். ஆய்வறிக்கையின் அடிப்படையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.