வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை கேள்வி கேளுங்கள்: நிர்மலா சீதாராமன்
வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை கேள்வி கேளுங்கள்: நிர்மலா சீதாராமன்
ADDED : நவ 11, 2025 02:40 PM

கோவை: தமிழகத்தில் வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும் என கட்சியினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக, கோவையில் இன்று (நவ., 11) பாஜ நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் முதலிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:தமிழகத்தில் எப்பொழுதும் சொல்ல கூடியது, எங்களுக்கு வர வேண்டிய நிதி வரவில்லை. எல்லா பணமும் வட மாநிலங்களுக்கு போய்விடுகிறது. 20 ரூபாய் வரி கட்டினால், அதில் எங்களுக்கு ரூ.2 கூட திருப்பி கைக்கு வருவதில்லை என்பதுதான்.
திமுக பல வருடங்களாக ஆளுமையில் இருந்த கட்சி. கோவைதான் முக்கியமான தமிழகத்திற்கு அதிக நிதி கொடுக்கிறது. கோவைக்காரர்கள் எல்லோரும் எழுந்து நின்று, நாங்கள் தான் நிறைய பணம் கொடுக்கிறோம், எங்களுக்கே எல்லா பணமும் வருகிறதா, இல்லையா? நாங்கள் கட்டும் வரியில் எங்களுக்கு எவ்வளவு பணம் திருப்பி வருகிறது என்று கேட்டால் நம்ம அரியலூர் என்னவாகும், ராமநாதபுரம் என்னவாகும்?
நாம் எல்லோரும் நின்று திமுகவிடம் கேள்வி கேட்க வேண்டும். பிரதமர் மோடி யாருக்கும் குறை வைக்காமல் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்.
இங்கு வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும். நான்கு விஷயத்தை படிக்க வேண்டும். கல்வி திட்டம் நாடு முழுவதும் எல்லோரும் ஏற்றுக்கொண்டு நன்றாக பண்ணி கொண்டு இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கூட, பிஎம்ஸ்ரீ கல்வி திட்டம் நமக்கும் வர வேண்டும்.
கல்வி தரம் உயர வேண்டும் என நினைக்கின்றனர். கல்விக்காக மத்திய அரசு என்ன திட்டங்கள் கொண்டுவந்தாலும் உடனே, அதை எதிர்த்து தமிழக அரசு போராடுகிறது. திமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தவர் பிரதமர் மோடி.
மக்கள் மத்திய அரசை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதால் அதன் திட்டங்களை இவர்கள் எதிர்க்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுகவினர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? தற்போது கிராமப்புற மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். அதை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. சட்டசபையில் பலம் இருக்கிறது என்பதால் பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், ஏன் உங்களுக்கு கலக்கம் வந்துவிடுகிறது. வரும் 2026ம் ஆண்டு தேர்தலில், திருப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியை நாம் எல்லோரும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

