ADDED : ஜன 27, 2024 02:20 AM
சென்னை:''அடுத்த குடியரசு தினத்தில், காந்தி விரும்பிய, ராகுல் விரும்பும் ராம ராஜ்ஜியம் அமைய வேண்டும்,'' என, தமிழக அரசின் சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த குடியரசு தின விழாவில், பீட்டர் அல்போன்ஸ் கொடி ஏற்றிய பின், பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:
சுதந்திரக் காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த தியாகிகள் வரலாற்றை மறந்து, அவர்களின் தியாகத்தை, தமிழக கவர்னர் ரவி கொச்சைப்படுத்தி வருகிறார்.
காந்திக்கும், சுதந்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை என அவர் சொல்கிறார். இது வேறு நாடாக இருந்திருந்தால், தேச விரோத வழக்கில் அவரை கைது செய்திருப்பர்.
காந்தி கண்ட ராம ராஜ்ஜியத்தில் அன்பு, அறம், வாய்மை இருந்தது. லோக்சபா தேர்தலில், வகுப்புவாத சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும்.
அடுத்த குடியரசு தினத்தில் காந்தி, ராகுல் விரும்பும் ராம ராஜ்ஜியம் அமைய வேண்டும். இதைத்தான் இந்த நாடும்; நாட்டு மக்களும் விரும்புகின்றனர்
இவ்வாறு அவர் பேசினார்.

